Published : 16 Apr 2024 05:27 AM
Last Updated : 16 Apr 2024 05:27 AM

மக்களவையில் அதிமுக பெரிய கட்சியாக அமர உழைப்போம்: தொண்டர்களுக்கு இபிஎஸ் உருக்கமான கடிதம்

சென்னை: ஜெயலலிதா காலத்தை போல மக்களவையில் அதிமுக மிகப்பெரிய கட்சியாக அமர உழைக்க வேண்டும் என்றும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அதிமுக உயிர்த் துடிப்புடன் மக்கள்செல்வாக்கு பெற்ற இயக்கமாகவலுவடைந்துள்ளதைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்ற சபதத்தை நிறைவேற்ற தொண்டர்கள் ஒவ்வொருவரும் லட்சிய உணர்வோடு உழைத்து வருவதை இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய வித்தியாசமாக பார்க்கிறேன்.

கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓடி, ஓடி உழைக்கிறார்களே. மெழுகாய் உருகி, ஓடாய் உழைத்துஉணர்வுகள் பொங்க நம் பின்னால் ஓடி வருகிறார்களே என்று ஒவ்வொரு இரவும் என் இதயம் தாங்கொணா நெகிழ்ச்சியில் தள்ளாடும். என் கண்களிலோ தாரை, தாரையாகக் கண்ணீர் வழியும். இந்த அன்புக்கு, அர்ப்பணிப்புக்கு, கொள்கை பிடிப்புக்கு நான் என்ன கைமாறு செய்வேன் இறைவா என்று கலங்குவேன்.

தொண்டர்களே நீங்கள் என்னை நம்பலாம். உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதைஎப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மக்களவையில், ஜெயலலிதா காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த நாட்களில் தேவைப்படுகின்றன.

ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடன் திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது. அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். அதிமுகவின் அரசியல் ஆற்றலை பாஜகவுக்கு உணர்த்த வேண்டும். பாஜக, சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து நம்மை சீண்டி வருகிறது.

அந்தக் கட்சியும், அதன் நியமனத் தலைவர்களும் அதிமுகவின் அரசியல் ஆற்றலும், தொண்டர்கள் பலமும் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள, இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சரியான பாடத்தைக் கற்பிக்கும் வண்ணம் ஜெயலலிதா காட்டிய பாதையில் தயங்காமல் செயல்படுங்கள்.

தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது. அந்த வெற்றியை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்றிட, தொடர்ந்து உற்சாகத்துடன் தேனீக்களைப் போல் இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக பணியாற்றி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x