Published : 12 Apr 2024 11:53 AM
Last Updated : 12 Apr 2024 11:53 AM

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது” - திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப் படம்

சென்னை: “மீண்டும் பாஜக ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான ‘மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சார்ந்த நாடு' என அறிவிப்பதற்கும்,

மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதனை வெளிப்படையாகவே பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இந்தத் தேர்தல் பரப்புரையில் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கு வாக்குரிமையை வழங்கி உள்ளது. ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சமத்துவத்தை அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தி உள்ளது. அதனை அழித்தொழித்து மீண்டும் மனுநூலில் அடிப்படையில் நாட்டை ஆள்வதற்கும், இந்திய சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகமாக சட்டரீதியாக மாற்றி அமைப்பதற்கும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் முற்படுகின்றன.

அதற்காகவே இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பாஜக ஃபாசிசக் கும்பல் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.

அரசமைப்புச் சட்டம்தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்து மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதுதான் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் திட்டமாகும். அதற்காகவே அவர்கள் தேர்தல் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து "நாட்டை மீட்போம்!. அரசமைப்புச் சட்டம் காப்போம்!" என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். புரட்சியாளரின் உருவச் சிலைகள் இல்லாத இடங்களில் அவரது திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்தத் தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல; இந்திய நாட்டையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் என்பதை மக்களிடம் அன்றைய நாளில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என இண்டியா கூட்டணி கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறோம். சங்- பரிவார் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டுவோம். நாடாளுமன்ற சனநாயகத்தைப் பாதுகாப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x