

மாநில உரிமையை காக்கும் அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என, குமரி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து, நேற்று மாலை தக்கலை மற்றும் நாகர்கோவிலில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது: மத்திய அரசிடம், நமது மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பழனிசாமி துரோகம் செய்து விட்டார்.
மாநில உரிமையைக் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கு, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் மூலம் 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். பாஜக அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறையும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.