Published : 10 Apr 2024 04:02 AM
Last Updated : 10 Apr 2024 04:02 AM

வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் - 5 அடுக்கு பாதுகாப்பு

வேலூரில் பிரதமர் மோடி வருகையையொட்டி காவல் துறையினர் நேற்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதையடுத்து, வேலூரில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். அதன்படி, வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று ( 10-ம் தேதி ) காலை நடைபெற உள்ள பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

இதில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் கே.பாலு ( அரக்கோணம் ), சௌமியா அன்புமணி ( தருமபுரி ), கே.எஸ்.நரசிம்மன் ( கிருஷ்ணகிரி ), அஸ்வத்தாமன் ( திருவண்ணாமலை ), கணேஷ்குமார் ( ஆரணி ) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசு கிறார். இதற்காக, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்துக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, வேலூர் விமான நிலையத்துக்கு காலை 10.10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு, காலை 10.25 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்துக்கு வந்தடைந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். முற்பகல் 11.25 மணியளவில் மீண்டும் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு வேலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் செல்கிறார்.

பின்னர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு செல்கிறார். பிரதமர் வருகையொட்டி வேலூர் மாநகர் முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை, ஆயுதப்படை, தமிழக சிறப்பு காவல்படை, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் பிரிவு என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை சார்பில் மட்டும் 3,900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வேலூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் கிரீன் சர்க்கிள், நேஷ்னல் திரையரங்கம் சந்திப்பு, பழைய பைபாஸ் சாலை, புதிய மீன் மார்க்கெட், கோட்டை சுற்றுச்சாலை வழியாக வேலூர் கோட்டை மைதானத்தின் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து செல்கிறார். எனவே, அவர் வந்து செல்லக்கூடிய பாதைகளில் காவல்துறையினர் நேற்று பாது காப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

இதற்காக, வேலூர் விமான நிலையத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு 3 விஐபி எஸ்கார்ட் கார்கள், ஒரு ஆம்புலன்ஸ், ஒரு அதிவிரைவு பாதுகாப்பு படை வாகனம் உட்பட மொத்தம் 36 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு 20 நிமிடங்களில் கோட்டை மைதானத்தை அடைந் தன. மீண்டும், 30 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்ட எஸ்கார்டு வாகனங்கள் மீண்டும் அதே பாதை வழியாக வேலூர் விமான நிலையத்தை அடைந்தன.

இந்த ஒத்திகையையொட்டி வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளிலும், தேசிய நெடுஞ் சாலையிலும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வேலூருக்கு பிரதமர் மோடி வருகையொட்டி தமிழக சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன், வேலூர் டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பாது காப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

வேலூருக்கு பிரதமர் வருகையையொட்டி வேலூர் விமான நிலையத்தை சுற்றி துப் பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு காவலர்கள் 20 அடிக்கு ஒருவரும், விமான நிலையம் முதல் கோட்டை மைதானம் வரை 30 அடிக்கு ஒரு காவலர் வீதம் சாலையின் இரண்டு பக்கமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்லக்கூடிய சர்வீஸ் சாலைகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. வேலூர் விமான நிலையம் முதல் வேலூர் மாநகரம் முழுவதும் பிரதமரின் உயர் பாதுகாப்பு படை குழு வினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x