Last Updated : 09 Apr, 2024 01:05 PM

 

Published : 09 Apr 2024 01:05 PM
Last Updated : 09 Apr 2024 01:05 PM

புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்.15-ல் தொடக்கம்

மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ல் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ல் துவங்கி 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் மாஹேயில் ஜூன் 1-ல் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், ஆந்திரத்தையொட்டி ஏனாமும், கேரளத்தையொட்டி மாஹேயும் அமைந்துள்ளன. இதையொட்டி புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமரி வெளியிட்ட உத்தரவு இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளங்களை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைபடுத்தியது போல், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

புதுவை பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனச்செட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் - புதுகுப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம வரையிலும் மற்றும் ஏனாம் மீன்பிடிப்பு பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம் நாட்டுப் படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகின்றது. மேலும் இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்படுகின்றது.

இதை போன்று மாஹே பகுதியில் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் நாள் முதல் ஜூலை 31-ம் நாள் வரை 61 நாட்களும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் கொண்டு குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகின்றது. மேலும் இயந்திரம் பொருத்திய பைபா படகில் மீன்பிடிப்பதும் தடைவிதிக்கப்படுகிறது.

மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சுருக்குவலை பயன்பாட்டுக்கான, கட்டுப்படுத்தப்பட்ட இடைக்கால ஆணையின் படி, புதுச்சேரி யூனியன் ஆட்சிப்பரப்புக்கு உட்பட்ட கிழக்கு கடல் மற்றும் மேற்கு கடல் பகுதிகளில், மேற்குறிப்பிட்ட நாட்களில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

படகு, வலைகளை சீரமைப்பு: இவ்வுத்தரவால் ஏப்ரல் 15 முதல் புதுச்சேரி, காரைக்காலில் இருந்து பல ஆயிரக்கணக்கான படகுகளில் மீன்பிடிக்கச்செல்லும் 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். படகுகள் புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள், கடற்கரையோரங்களில் நிறுத்திவிடுவர். குறிப்பாக மீனவர்கள் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்குவர் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தவுடன் புதுச்சேரியில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x