Published : 01 Apr 2024 04:27 PM
Last Updated : 01 Apr 2024 04:27 PM

“மீனவர்கள் பிரச்சினை அனைத்துக்கும் திமுகவே காரணம்” - அண்ணாமலை @ கச்சத்தீவு

கோவை: "இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம். வேறு யாரும் இல்லை. 2014-க்கு முன்பு, நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திமுகதான் தார்மிக பொறுப்பேற்க வேண்டும். 2014-க்கு பிறகான மீனவர்கள் பிரச்சினைக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று நாடகத்துக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியதைப் போல 21 முறை பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால், இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, மறைந்த முதல்வர் கருணாநிதி கச்சத்தீவைக் கொடுக்க சம்மதம் இல்லை என்று கூறியிருந்தால், கச்சத்தீவை மத்திய அரசு கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவருடைய அரசியல் காரணங்களுக்காக கொடுத்துவிட்டு, வெளியுறவுத் துறைக்கு கச்சத்தீவை மீட்டுத் தரக்கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

எனவே, திமுகவின் பங்களிப்பு அதில் இருந்திருக்கிறது. கச்சத்தீவைக் கொடுத்த பிறகு, ராமநாதபுரம் பகுதியில் இந்தியாவின் புவியியல் எல்லை சுருங்கியிருக்கிறது. அதற்கு காரணம் மாபெரும் துரோகம் செய்த காங்கிரஸும், திமுகவும்தான். காங்கிரஸ் கட்சியும், திமுகவும் எப்போதெல்லாம் இணைகிறார்களோ அப்போதெல்லாம் இந்தியாவின் ஏதாவது ஒருபகுதி கொடுக்கப்படும். குறிப்பாக காங்கிரஸ் தனியாக இருந்தபோது, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒருபகுதியை கொடுத்திருக்கிறார்கள். திமுக அவர்களுடன் சேர்ந்தபோது கச்சத்தீவைக் கொடுத்துள்ளனர்.

இந்திய இறையாண்மையின் மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லை 1960-ல் பேசிய அதே பேச்சைத்தான் அவர்கள் பேசப் போகிறார்களா? இந்தப் பகுதிகளை எல்லாம் இந்தியாவின் எல்லைகளாகத்தான் பார்க்கிறார்களா என்பதை திமுக மறுபடியும் தெளிபடுத்த வேண்டும்.

மேலும், இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுகதானே தவிர வேறு யாரும் இல்லை. 2014-க்கு முன்பு, நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திமுகதான் தார்மிக பொறுப்பேற்க வேண்டும். 2014-க்கு பிறகான மீனவர்கள் பிரச்சினைக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக பாஜக கடந்த சில ஆண்டுகளாக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். பாஜக சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்திருக்கிறோம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. குறிப்பாக, எல்லை சுருங்கியப் பிறகு அது எப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது? முன்பெல்லாம் தமிழக மீனவர்கள் நெடுந்தீவு வரை மீன்பிடிக்கச் சென்றனர். இப்போது கச்சத்தீவுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

அந்தப் பகுதிகளில் பாறைகள் அதிகமாக இருப்பதால், மீன் வளமும் குறைவாக இருக்கிறது. இதனால், சர்வதேச கடல் எல்லை அருகில் சென்றாலே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, கச்சத்தீவு மறுபடியும் நமது நாட்டுக்கு வரவேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x