Published : 06 Feb 2018 07:21 AM
Last Updated : 06 Feb 2018 07:21 AM

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு தடை: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் ஆணை

தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளை யும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் செயல்படும் சூழல் உரு வாகி உள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் மத்திய அரசிடம் உரிமம் பெற்று மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு ஆற்று மணலை இறக்குமதி செய்து வருகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த மணல் குமரியில் விற்பனை செய்வதற்காக லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் சரகத்தில் சென்றபோது மணல் லாரிகளை வருவாய் அதிகாரிகளும், போலீஸாரும் பறிமுதல் செய்தனர். இந்த லாரிகளை விடுவிக்கவும், இறக்குமதி மணலை விற்கவும் அனுமதி வழங்கக் கோரி, அந்நிறுவனம் உயர் நீதிமன்றக் கிளை யில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாக்க தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களில் மூட வேண்டும், புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது, ஜல்லி கற்கள் தவிர்த்து பிற கிரானைட் குவாரிகளை அடுத்தடுத்து மூட வேண்டும். மணல் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண் டும் என கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அந்த மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் குவாரிகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. மணல் குவாரிகளை மூடினால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் பாதிக்கப்படும்.

இறக்குமதி மணல் தொடர்பாக மட்டும், தனியார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த நிலை யில் தனி நீதிபதி தேவையில்லாமல் பிற மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், மாநில அரசின் கருத் தை கேட்கவில்லை. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு வை நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவில், கனிமவளம் சுரண்டப்படுவதைத் தடுக்க மாநில அரசு தவறும்போது, அதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. கனிமவளங் கள் சட்டவிரோதமாக கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் பலன் இல்லை.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தவறும் நிலையில் அரசியலமைப்பு உரிமைகள், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற முறையில் தலையிடுவது நீதிமன்றங்களின் கடமையாகும்.

இதனால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண் டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், உத்தரவை செயல்படுத்த தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், தமிழ்நாட்டில் சுமார் 3 லட் சம் வீடுகளின் கட்டுமானப் பணிகளும் தடுப்பணை கட்டுமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். பின்னர் அடுத்த விசாரணையை பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அமைச்சர் கருத்து

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்க வேண்டும், அதேநேரத்தில் மலிவு விலையிலும் மணல் கிடைக்க வேண்டும். இதற்காக அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் மக்களுக்கு தடையில்லாமல் மணல் கிடைக்க தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மணலுக்கு மாற் றாக எம் சாண்டின் பயன்பாட்டை ஊக்குவிக்க அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் அனைத்தும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றே திறக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் திறக்கப்பட உள்ள மணல் குவாரிகளும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றே திறக்கப்படும் என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x