Published : 21 Mar 2024 05:51 AM
Last Updated : 21 Mar 2024 05:51 AM

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: உத்தேச பட்டியலுடன் டெல்லி புறப்பட்டார் செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. விருப்ப மனு பெறுதல் நேற்று பிற்பகலுடன் முடிந்த நிலையில், உத்தேச பட்டியலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸுக்கு, 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று பிற்பகல் 1 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனுக்கள் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்ற மாநில தேர்தல் குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் முடிவில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு உடனான ஆலோசனைப்படி, அகில இந்திய தலைமைக்கு பரிந்துரைப்பதற்காக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 3 நபர்கள் வீதம் உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலுடன் இன்று (மார்ச் 20) டெல்லி புறப்பட்டு செல்கிறேன். அங்கு அகில இந்திய தலைவர்களுடன் கலந்துரையாடி, ஹரி சவுத்ரி தலைமையிலான பரிசீலனை குழுவுடன் விவாதித்து நாளை (மார்ச் 21) மத்திய தேர்தல் குழு தலைவர்களுடன் கலந்தாலோசிக்க இருக்கிறோம். நாளை இரவுக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று பிரதமர நரேந்திர மோடி பேசியிருக்கிறார். அவர்கள் திராவிட இயக்கத்தில் இருக்கிறார்களாஇல்லையா என பிரதமர் பதில்சொல்ல வேண்டும். அன்புமணியையும், ஜி.கே.வாசனையும் மேடையில் வைத்துக்கொண்டு குடும்ப வாரிசு அரசியலை ஒழிப்போம் என அண்ணாமலை கூறுகிறார். இதற்கு அன்புமணியும், ஜி.கே.வாசனும் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x