Published : 21 Mar 2024 05:24 AM
Last Updated : 21 Mar 2024 05:24 AM

கோவையில் பள்ளி வழியாக சென்றதால் மாணவிகள் பிரதமர் பேரணியை வெளியே வந்து பார்த்துள்ளனர்: அரசுத் துறைகள் நடத்திய விசாரணையில் தகவல்

சென்னை: கோவையில் பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவிகள் சீருடையில் பங்கேற்ற விவகாரம் தொடர்பாக கல்வித் துறை, தொழிலாளர் நலத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பிரதமரின் வாகன பேரணி நடந்தசாலையில் அந்த பள்ளி உள்ளதாகவும், பிரதமர் அப்பகுதிக்கு வந்தபோது, மாணவிகள் பள்ளிக்கு வெளியே வந்து பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள், கருத்துகளை அறிவதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி, 22 அல்லது 23-ம் தேதி இக்கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. சனி, ஞாயிறன்று வேட்புமனு தாக்கல் கிடையாது.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்துக்கு செலவின பார்வையாளர்கள் 58 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கான தொகுதியில் பொறுப்பேற்றுள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு முன்பு, பொது பார்வையாளர்கள் வருவார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இதற்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிடிபட்ட 18 கிலோ தங்கம், தனியார்நிறுவனத்துக்கு சொந்தமானதுஎன்பதால் வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் அளிக்கும்பட்சத்தில் வருமானவரித் துறை அதை முறையாக ஒப்பீடு செய்யும். அதேபோல, மதுரையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் வருமானவரித் துறை ஆய்வு செய்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, ரூ.5.63 கோடி ரொக்கம், ரூ.44 லட்சம் மதுபானங்கள், ரூ.26 லட்சம் மதிப்பு கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.19 லட்சம் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.32 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என ரூ.6.84 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் பிரதமர் மோடி கடந்த 18-ம் தேதி நடத்திய வாகன பேரணியில், பள்ளி மாணவிகள் சீருடையில் பங்கேற்றது குறித்து கல்வித் துறை, தொழிலாளர் நலத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், வாகன பேரணி நடைபெற்ற சாலையில் அந்த பள்ளி உள்ளதாகவும், பிரதமர் அப்பகுதிக்கு வரும்போது, மாணவர்கள் பள்ளிக்கு வெளியேவந்து பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x