Published : 17 Mar 2024 06:20 AM
Last Updated : 17 Mar 2024 06:20 AM
திருச்சி: கடந்த 70 ஆண்டுகளில் துளித்துளியாக வளர்ந்து வந்த இந்தியா, 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடந்த 1934-ம் ஆண்டு திருச்சிக்கு வந்த மகாத்மா காந்தி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அருகே அரச மரத்தடியில் அமர்ந்து, மக்களிடம் உரையாற்றினார். 1984-ல் அந்த இடத்தில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி அமைந்த பின், அந்த மரத்தை கல்லூரி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைதிறப்பு விழா நேற்று நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிலையைத் திறந்துவைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
உலக அளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 10 ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கிராமத்தில் இருக்கும் பாமர மக்கள்வரை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா எவ்வளவு வளர்ச்சிஅடைந்தாலும், மகாத்மா காந்தியின் மதிப்புமிக்க சிந்தனைகளை நாம் மறந்துவிடக்கூடாது.
கடந்த 70 ஆண்டுகளில் துளித்துளியாக வளர்ந்து வந்த இந்தியா,கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறியுள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காந்தி அறைகூவல் விடுத்ததுபோல, 2047-க்குள் முன்னேற்றம் அடைந்தநாடாக இந்தியா மாற இளைஞர்கள் பங்களிப்பு அவசியம் என பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்நம்மைப்போல இருந்த சீனாஇன்று எவ்வளவோ முன்னேறிவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கு ஜனநாயகம் இல்லை.
இந்தியாவின் அரசியல் சுதந்திரத்துக்காக காந்தி போராடினார். இன்று நமக்குத் தேவை பொருளாதார சுதந்திரம். அதனால்தான் ‘ஆத்ம நிர்பார் பாரத்' என்கிறோம். சுயசக்தியில் உள்ள நல்ல பொருளாதாரம் தேவை. இவ்வாறு அவர்பேசினார். விழாவில், கல்லூரித்தலைவர் பி.எஸ்.சந்திரமவுலி, செயலாளர் கே.மீனா, தலைமை செயல்அலுவலர் கே.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT