Published : 17 Mar 2024 04:02 AM
Last Updated : 17 Mar 2024 04:02 AM

பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக, காங்., கம்யூ. கட்சிகள் கண்டனம்

மனோ தங்கராஜ், செல்வப் பெருந்தகை, முத்தரசன்

சென்னை: திமுக, காங்கிரஸ் குறித்த பிரதமரின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், ‘இலங்கை கடற்படையால் கைதாகி தூக்கிலிடப்படவிருந்த மீனவர்களை பத்திரமாக தாயகத்துக்கு அழைத்து வந்தேன், ‘இண்டியா’ கூட்டணி பெண்களை அவமரியாதை செய்கிறது’ என்பனஉள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது: பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: மத்திய பாஜக அரசே பணக்காரர்களை மிரட்டி அடி பணிய வைத்து தேர்தல் பத்திரம் மூலம் கோடிக்கணக்கான பணத்தை பறித்துள்ளது. 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது தான் நமது மீனவர்களிடம் இருந்து கைப் பற்றிய படகுகளை இலங்கை அரசு முதன் முறையாக ஏலம் விட்டது. அந்தப் படகுகளை மீட்க முடியாத ஒரு பிரதமர், இன்றைக்கு மீனவர்களை பாதுகாத்தேன் என கூறுகிறார். சாதி ரீதியான கட்டமைப்பை எதிர்த்து பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தது திராவிட இயக்கங்கள். தாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்று மக்களிடம் சொல்ல பாஜக அரசுக்கு எதுவும் இல்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை: காங்கிரஸ் ஆட்சியில் சிஏஜி அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப் பட்டவர்களை நீதிமன்றமே விடுவித்த நிலையில் மீண்டும் 2ஜி சேற்றை வாரி இறைப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு அழகல்ல. அதே நேரம், நெடுஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பான சிஏஜி அடிப்படையில் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக ஆட்சியில் முதன் முறையாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில், காங்கிரஸ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது எனக் கூறுகிறார். தமிழக மக்கள்இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க ‘இண்டியா’ கூட்டணி மீது பழி சுமத்துகிறார் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் சட்ட விரோத செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களின் வாழ் வாதாரத்தைப் பாதுகாக்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x