Published : 15 Mar 2024 01:24 PM
Last Updated : 15 Mar 2024 01:24 PM

“திமுகதான் தமிழகம், தமிழ் பண்பாட்டின் எதிரி” - பிரதமர் மோடி பேச்சு @ கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

கன்னியாகுமரி: “திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக - காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது” என கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, “மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது.

நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். தமிழகத்தில் இண்டியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். இண்டியா கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணி. இண்டியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் திமுக - காங்கிரஸ்கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.

திமுக-காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது. அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களுடைய கொள்கையே அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான். ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், மற்றொரு பக்கம் இண்டியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள் இருக்கின்றன.

5ஜி போன்ற திட்டங்களை பாஜக மக்களுக்கு கொடுக்கிறது. பாஜகவின் பெயரில் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் இருக்கிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல்தான் இருக்கின்றன. 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். பாஜக ஏராளமான விமான நிலையங்களை கட்டியது, ஆனால் இண்டியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் நடந்தது. இந்தப் பட்டியலை சொன்னால் நீளமாக சென்று கொண்டே இருக்கும்.

திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. உச்ச நீதிமன்றமே தமிழகத்தை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, நமது கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் எப்பொழுதும் திமுக வெறுப்பினைக் கக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெருமையை, அடையாளத்தை பாதுகாக்க பாஜக என்றும் முன்னணியில் இருக்கிறது. அவர்களின் தூற்றல்களையும். பேச்சுகளையும் நாங்கள் பொருட்படுத்துவதே கிடையாது.

மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. வஉசி துறைமுகத்தை பாஜக புதுப்பித்துள்ளது. வஉசி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு திமுக-காங்கிரஸ் தடை விதித்தது. ஆனால் பாஜக அதனை நீக்கியது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x