Published : 15 Mar 2024 07:07 AM
Last Updated : 15 Mar 2024 07:07 AM

எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டும்: ‘தமிழ் திசை’ பதிப்பக நூல் அறிமுக விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

இந்து குழுமத்தின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில், அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி' எனும் நூலின் அறிமுக விழா சென்னை எம்ஜிஆர் - ஜானகி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட்டார். உடன் காமராஜ் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன், அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் சேஷாத்ரி சாரி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இயக்குநர் விஜயா அருண், ஆசிரியர் கே.அசோகன், பத்திரிகையாளர் ஷபிமுன்னா உள்ளிட்டோர். படங்கள்: ம.பிரபு

சென்னை: ‘‘எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் பிரதமர் மோடியின் வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டுதலாக அமையும்’’ என்று சென்னையில் நடைபெற்ற ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை தெரிவித் தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ (The Architect of the New BJP) என்ற நூலை, குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர் அஜய் சிங் எழுதியுள்ளார். இதை ‘தி இந்து’ குழுமத்தின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளது.

இந்த நூல் அறிமுக விழா, சென்னை எம்ஜிஆர் -ஜானகி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இயக்குநர் விஜயா அருண் கவுர வித்தார்.

விழாவில் கலந்துகொண்ட வர்கள் பேசியதாவது:

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் (தலைமை உரை): ‘தமிழ் திசை’ பதிப்பகம் மூலம் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ராஜாஜி, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் குறித்த நூல்கள் வெளியிடப்பட்டன. அதேபோல, தேசிய தலைவர்கள் தொடர்பாக புத்தகம் வெளியிட திட்டமிட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அஜய் சிங் எழுதியநூல் சிறந்த தேர்வாக இருந்தது.

பிரதமர் மோடியின் புகழ் பாடுவதாக இந்த நூல் இருக்காது. அவர்அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்தது, அவரது அரசியல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை இந்நூல்பேசுகிறது. சிறந்த ஆய்வு நூலுக்கான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அனைவருக்கும் தெரியாத, திரைக்கு பின்னால் இருக்கும் மோடியை அழகாக காட்டிஇருக்கிறது இந்த நூல். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில், நாடு முழுவதும் காங்கிரஸ் வென்றது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த குஜராத்தில் 20 எம்.பி.க்களை பாஜக பெற்றது. குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இன்றுவரை பாஜக ஆட்சிதான். இது மோடி எனும் தனி மனிதனின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தற்போது பிரதமராகவும் 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறார். நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் உங்களுக்கு வழிகாட்டுதலாக இந்நூல் அமையும்.

விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்.

காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன்: பிரதமர் மோடியிடம் இருந்துஇன்றைய இளைஞர்கள் கற்கவேண்டிய அம்சங்கள் அதிகம் உள்ளன. காமராஜர், மோடி ஆகிய இருவரையும் ஒன்றாக சேர்த்தே பார்க்கிறேன். இருவரும் பெரிய பின்புலம் இல்லாமல் அரசியலில் உச்சத்துக்கு வந்தவர்கள். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள்சிறப்பானவை. அந்த பணியை பிரதமராகவும் தொடர்கிறார். மீண்டும்அவரே பொறுப்புக்கு வரவேண்டும்.

அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு நம் அனைவருக்கும் ஒரு பாடமாகும். அடிமட்ட தொண்டனான அவர், நாட்டின்பிரதமரானது சாதாரண விஷயம் அல்ல. அத்தகைய சிறப்புடைய மோடி, தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்புகிறார். அவரை தமிழகம் வரவேற்க வேண்டும்.

பேராசிரியர் சேஷாத்ரி சாரி: பிரதமர் மோடி, பாஜகவின் சிற்பி மட்டுமல்ல; நமது புதிய பாரதத்தின் சிற்பியும்கூட. நம் நாட்டில் காங்கிரஸ் தவிர வேறொரு கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையை கொண்டு வந்தது பாஜகதான். கடந்த 10 ஆண்டுகளில் உலகில் உள்ள 80 சதவீத நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்பும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நூலாசிரியர் அஜய் சிங்கின் ஏற்புரையை புத்தக மொழிபெயர்ப்பாளர் வ.ரங்காசாரி வாசித்தார். ‘‘மேட்டுக்குடிகளுக்கான அரசியல் அமைப்பாக இருந்த காங்கிரஸை, சாமானியர்களும் பங்கேற்கும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் மகாத்மா காந்தி. காங்கிரஸின் அடித்தளம் வலுவாக இருந்ததால்தான் 60 ஆண்டுகளாக செயல்படுகிறது. அதேபோல, பிரதமர் மோடியும் பாஜகவை வலுவாக கட்டமைத்துள்ளார். அதை இந்த நூலில் விரிவாக கூறியுள்ளோம்’’ என்றார்.

இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ தலைமை உதவி ஆசிரியர் கே.சுந்தரராமன் தொகுத்து வழங்கினார்.

‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ (The Architect of the New BJP) நூல் விலை ரூ.350. இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/ கூரியர் மூலம் பெற, ஒரு நூலுக்கு தபால் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 சேர்த்து KSL MEDIA LIMITED என்ற பெயரில் DD, M.O. அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-35048001. நூலை ஆன்லைனில் பெற store.hindutamil.in/publications எனும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x