Last Updated : 14 Mar, 2024 09:59 PM

 

Published : 14 Mar 2024 09:59 PM
Last Updated : 14 Mar 2024 09:59 PM

சிவகங்கையில் ரூ.1.75 கோடி சாலை டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.75 கோடி சாலைப் பணிக்கான டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் விட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த கந்தசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் சாலை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கீழையூர் - தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி சாலையை ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் இருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்றிதழ் பெற்று பிப். 26 மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலம் சமர்பிக்க கூறப்பட்டிருந்தது.

அதன்படி முறையாக விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் வழங்கியதில் அரசியல் தலையீடு உள்ளது.

நான் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் முறையாக டெண்டர் விண்ணப்பித்தபோதும் காரணங்கள் இல்லாமல் நிராகரித்துள்ளனர். எனவே டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, சாலைப் பணிக்கான டெண்டரில் ஆன்லைன் மூலமாக உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது தெரிகிறது. இதனால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு டெண்டர் நடத்தலாம் என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x