Published : 07 Feb 2018 06:33 PM
Last Updated : 07 Feb 2018 06:33 PM

படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்வதா?- ஜோதிமணி காட்டம்; தமிழிசை பதிலடி

 லட்சக்கணக்கில் செலவழித்து லட்சியத்துடன் படித்து வேலை தேடும் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்வதா என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்ப, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலுக்கு ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற கேள்விக்கு, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியிருந்தார்.

இது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறிவிட்டது. பட்டதாரி இளைஞர்கள் கோபமடைந்து விமர்சித்தனர். ட்விட்டர் முதல் வாட்ஸ் அப் வலைதளங்களில் பக்கோடா மேட்டர் நெட்டிசன்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இது தவிர அரசியல் கட்சித்தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பட்டமளிப்பு விழா உடையுடன் இளைஞர்கள் பக்கோடா விற்று கைதானார்கள்.

பக்கோடா விற்கலாமே என கூறியதன் மூலம், பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களை இழிவுபடுத்திவிட்டார் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி விமர்சித்துள்ளார். அவரது பதிவு வருமாறு:

''லட்சக்கணக்கில் செலவு செய்து இளமை முழுவதும் படித்து,வேலை தேடி அலையும் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்ல ஒரு அரசும் கட்சியும் எதற்கு? வருடத்திற்கு இரண்டுகோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவது என்ன ஆனது? பக்கோடா விற்பவர்களுக்கு அது சுய தொழில். அதில் அரசின் பங்கு என்ன?'' இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை 'பக்கோடா விற்பது கேவலமா? பிச்சை எடுப்பது கேவலமா?' என்று கேட்டுள்ளார். தமிழிசையின் பதிவுக்கு மற்ற நபர்கள் கடும் பதிலடி கொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x