Published : 10 Mar 2024 07:35 PM
Last Updated : 10 Mar 2024 07:35 PM

''தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது; இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்'': ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி | கோப்புப் படம்

சென்னை: "தமிழ்நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சம் உறுதியாகி இருக்கிறது. இளைஞர்கள் இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்" என ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமீபத்தில் கணிசமான அளவில் போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ்நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்.

மத்திய உளவுத்துறை, புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கண்டறிந்துள்ளன. இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அழிவை ஏற்படுத்தவும் கூடியது. இதை பரிசோதிக்காமல் விட்டால் விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.

துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும் மிகுந்த முன்னுரிமையுடனும் இந்த அச்சுறுத்தலைக் கையாள வேண்டும். மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்யும் அதே வேளையில், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான்: தயவு செய்து இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும். இத்தகைய போதைப்பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ அருகாமையிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது. நமது மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x