Published : 09 Mar 2024 06:28 AM
Last Updated : 09 Mar 2024 06:28 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்: இணைந்து பணியாற்ற வருமாறு நடிகர் விஜய் அழைப்பு

கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்துவைத்து, தன்னுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கி யுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கடந்த பிப்.7-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக மகளிர் தலைமையில் புதிய அணியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உருவாக்கி உள்ளார்.

மகளிர் தலைமையில் குழு: அந்தவகையில், உறுப்பினர் சேர்க்கை மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தஎஸ்.என்.யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்த வி.சம்பத்குமார், துணை செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த ஏ.விஜய் அன்பன்கல்லனை, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.எல்.பிரபு ஆகியோரை நேற்று முன்தினம் விஜய் நியமித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்று ஏற்கெனவே நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. இதற்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

முதல் உறுப்பினராக விஜய்: இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் நேற்று மாலை அறிமுகம் செய்தார்.

அதன்படி, உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், இணைய பயனாளர்களுக்கென தனித்தனியாக ‘க்யூஆர்’ குறியீடு அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்குவதை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காணொலி மூலம் விஜய் தொடங்கி வைத்தார்.

அப்போது, க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி செயலி மூலம் விஜய், தனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்தார்.

அதைத்தொடர்ந்து, காணொலி மூலம் அவர் பேசியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீடைப் பயன்படுத்தி சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு, 100மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க பரிசீலிக்கப் பட்டு வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது: உறுப்பினர் அட்டையை பெறுவதற்கு தமிழகம் உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஒரே நேரத்தில் க்யூஆர் குறியீடைப் பயன்படுத்தியதால் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி, அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயலிக்கான தளங்கள் அனைத்தும் முடங்கின. பின்னர் சில மணி நேரம் கழித்து அனைத்து தளங்களும் பயன்பாட்டுக்கு வந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x