Published : 09 Mar 2024 06:02 AM
Last Updated : 09 Mar 2024 06:02 AM

நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகம்

சென்னை: நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது.

8 லட்சம் சதுர அடி பரப்புடன் 8 தளங்களுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான நூலகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கிறார்கள்.

11-ம் தேதி முதல் அறிமுகம்: இந்நிலையில், வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறும்போது, ``இதர பொது நூலகங்களைப் போன்று உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியை மார்ச் 11-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

முதல்கட்டமாகச் சிறுவர் பிரிவு மற்றும் தமிழ் பிரிவுநூல்களை நூலக உறுப்பினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x