Published : 07 Feb 2018 02:37 PM
Last Updated : 07 Feb 2018 02:37 PM

பெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்காமல் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தை அடுத்த வாரம் கூட்டவும், 5 நாட்களுக்கு நடத்தப்படும் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிறைவேற்றவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்து 6 மாதங்களாகின்றன. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மையில் இந்த அரசு பிழைத்துக் கொண்டிருக்கிறது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக 111 உறுப்பினர்களும், எதிராக 122 உறுப்பினர்களும் உள்ளனர். இதுதான் உண்மையானக் கணக்கு ஆகும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் மனு கொடுத்த உடனேயே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தால், அப்போதே அரசு கவிழ்ந்திருக்கும். ஆனால், மத்திய அரசின் துணையுடன் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்து, அதுகுறித்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இழுத்துக் கொண்டே சென்றதால் இவ்வளவு காலம் பினாமி அரசு தப்பியது.

18 உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து, இம்மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும். அதற்கு பயந்து தான் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிறைவேற்றி விடலாம் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும்.

ஆனால், மரபுப்படியும், தார்மிக நெறிகளின்படியும் இது தவறு ஆகும். இதை உயர் நீதிமன்றம் கூட ஏற்காது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். அந்தத் தீர்ப்பு அரசுக்கு எதிராகத் தான் இருக்கும். அதற்கு அடுத்த நிமிடமே எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்பது உறுதி. இந்த ஆண்டு இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x