Published : 25 Feb 2024 04:06 AM
Last Updated : 25 Feb 2024 04:06 AM

ஆனைமலையில் அதிமுக பேனர் அகற்றம்: போலீஸாரை கண்டித்து மறியல்

பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றிய போலீஸாரைக் கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டது. அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி இரவு நேரத்தில் பேனரை போலீஸார் அகற்றினர். நேற்று காலை ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக வந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுகவினர், பேனர் அகற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஏன் அகற்றவில்லை என போலீஸாரிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். மேலும் போலீஸாரைக் கண்டித்து, வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், பொள்ளாச்சி- சேத்துமடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டிஎஸ்பி நிதி தலைமையிலான போலீஸார், அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடைந்த அதிமுகவினர், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x