Published : 22 Feb 2024 05:04 AM
Last Updated : 22 Feb 2024 05:04 AM

வேலைவாய்ப்பு, அரசியலில் பங்களிப்பை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், துறை ஆணையர் வே.அமுதவல்லி ஆகியோர்.

சென்னை: தமிழகத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடன், சமூக நீதி,சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம்அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் மாநில மகளிர் கொள்கை-2024 உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலன், மகளிர்உரிமை துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையைமுதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், துறை ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாலின உணர்திறன் கொண்ட கல்விமுறையை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளர்இளம் பெண்கள், மகளிரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பில் மகளிர் பங்களிப்பைஅதிகரித்தல், பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல், பெண்கள் நிர்வகிக்கும்சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெற டிஜிட்டல் கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைத்தல், பயிற்சி, திறன் மேம்பாடு மூலம் திறன் இடைவெளியை குறைத்தல், மகளிருக்கு வங்கி கடன் உதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவை மாநில மகளிர் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

சமூகநலத் துறை ஒருங்கிணைப்பு துறையாக இருந்து இக்கொள்கையின் செயல்பாட்டை கண்காணிக்கும். இதற்காக, சமூகநலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல், கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும்.

தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலை பெண்கள் உரிமை குழு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, கொள்கை செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்கும். இதேபோல, ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை இதன் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளும் சவால்களை சரிசெய்யும்.

சமூகம், பொருளாதாரம், அரசியலில் அதிகார பகிர்வு பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களின் நிலையை இக்கொள்கை மேம்படுத்தும். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம்நிறைந்த சூழலை உருவாக்கவும் இது ஏதுவாக இருக்கும்.

நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்காக தனியான ஒரு கொள்கையை ஒருசிலமாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x