Published : 17 Feb 2024 06:05 AM
Last Updated : 17 Feb 2024 06:05 AM

தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்திலுள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1,622 அரசு ஆரம்பசுகாதார நிலைய ஆயவகங்களுக்கு மத்திய அரசின் தேசிய தரநிர்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அந்த சான்றிதழ்களை ஆய்வகங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், தேசிய தரநிர்ணய அங்கீகார வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், எம்எல்ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சென்னை தவிர்த்து, 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மத்திய அரசின் தேசிய தரநிர்ணய அங்கீகார சான்றிதழ் 1,622 ஆரம்பசுகாதார நிலையங்களில் உள்ளஆய்வகங்களுக்கு கிடைத்துள் ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எப்படி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறதோ, அதேபோன்று இந்த ஆய்வக வசதியும் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்கின்ற வகையில் கடந்த 5-ம்தேதி கன்னியாகுமரி மாவட்டம் தொல்லவிளை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி ஆய்வகம் என்கின்ற திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த திட்டத்தின்படி 34 வகை ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் வீடுகள் தேடிச் சென்று ஆய்வக வசதிகள் என்கின்ற வகையில் 63 வகையான ஆய்வக வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் பாராட்டி மத்திய அரசு, தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழை கொடுத்துள்ளது.

சமீபத்தில், 1,021 புதிய மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. அதேபோல், 977 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணைகள் தரப்பட்டுள்ளன. 332 ஆய்வக நுட்புநர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x