Last Updated : 13 Feb, 2024 06:03 AM

 

Published : 13 Feb 2024 06:03 AM
Last Updated : 13 Feb 2024 06:03 AM

கோவை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையில் தொடரும் விபத்துகள் - ஓராண்டில் உயிரிழப்பு இரு மடங்கு

கோவை: கோவை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையில் தொடர் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் இருமடங்காக உயர்ந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு, சென்னை, சேலம்மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், கோவை வழியாக கேரளாவுக்கு செல்வதற்கும், கேரளாவில் இருப்பவர்கள் கோவை வழியாக மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் பிரதான சாலையாக சேலம் - கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இச்சாலை நீலாம்பூர் வரை ஆறு வழிச்சாலையாகவும், பின்னர் நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலையாகவும் உள்ளது. இந்த 26 கிலோ மீட்டர் தூர சாலை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலை எனப்படுகிறது.

காவல் துறையின் புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த 2022-ம் ஆண்டு மாவட்டத்தில் 712 உயிரிழப்பு சாலை விபத்துகள் ஏற்பட்டு 787 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2023-ம் ஆண்டு 680 உயிரிழப்பு சாலை விபத்துகள் ஏற்பட்டு 711 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கண்ட ‘எல் அண்டு டி’பைபாஸ் சாலையில் மட்டும் 2022-ம்ஆண்டு 55 பேரும், 2023-ம் ஆண்டு 120 பேரும் உயிரிழந்துள்ளனர். ஒராண்டில் இருமடங்காக சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு கூறியதாவது: வாகனப் போக்குவரத்துக்கேற்ப ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலை அகலமாக இல்லாமல், குறுகியதாக உள்ளது. இவ்வழித்தடத்தில் ஈச்சனாரி, சிந்தாணிபுதூர் சந்திப்பு, இருகூர், நீலாம்பூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இச்சாலையில் சிந்தாமணிபுதூர், ராவத்தூர் பிரிவு, வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி பிரிவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இருசக்கர வாகன ஓட்டிகளே விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிவேக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துதல், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையை விரிவுபடுத்துதல் ஆகியவையே விபத்துகளை தடுக்க உகந்த வழிகளாகும், என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும்போது,‘‘இச்சாலையில் விபத்துகளை தடுக்க சமீபத்தில் நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை சாலை பராமரிப்பு நிறுவனத்திடம் அளித்துள்ளோம்.

இச்சாலையில் உள்ள சந்திப்புப் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள், எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை அதில் தெரிவித்துள்ளோம். போலீஸாரின் ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது ‘எல் அண்டு டி’ ஒப்பந்த நிறுவனத்துக்கு சாலையை பராமரிக்க காலஅவகாசம் 2029-ம் ஆண்டு வரை உள்ளது.

தொடர் கோரிக்கையால், நீலாம்பூர் - மதுக்கரை வரையிலான 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ‘எல் அண்டுடி’ பைபாஸ் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அது நிலுவையில் உள்ளது. இச்சாலையை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x