Published : 13 Feb 2024 05:36 AM
Last Updated : 13 Feb 2024 05:36 AM

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை முன்னாள் அதிகாரிகள் விடுதலை: தாயகம் திரும்பிய 7 பேர் பிரதமர் மோடிக்கு நன்றி

புதுடெல்லி: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படையில் சுமார் 20ஆண்டுகள் வரை பணியாற்றிய 8 அதிகாரிகள், கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு நீர்மூழ்கி கப்பல் தொடர்பாக உளவு பார்த்ததாகக் கூறி அந்த 8 பேரும் கடந்த 2022-ம்ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, அவர்களுடைய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தூதரக மற்றும் சட்ட ரீதியாகஉதவ வெளியுறவு அமைச்சகம் முன்வந்தது. இதன்படி, 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற காப் 28 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார். மேலும் இதுதொடர்பாக இருதரப்பு உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேல்முறையீட்டு மனு மீதான வீசாரணை முடிந்த நிலையில், 8 பேரின் மரண தண்டனையை, சிறை தண்டனையாக குறைத்து கடந்த டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும், சிறை தண்டனை தொடர்பான விவரம் வெளியாகவில்லை.

இந்த சூழ்நிலையில், 8 இந்தியகடற்படை முன்னாள் அதிகாரிகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர்நேற்று காலை இந்தியா திரும்பினர்.டெல்லி விமான நிலையம் வந்த அவர்கள் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என கோஷமிட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என கருதப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கத்தார் சிறையில் இருந்து 8 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கத்தார் அரசின்இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள்” என கூறப்பட்டுள்ளது.

கத்தார் சிறையிலிருந்து விடுதலையாகி டெல்லி திரும்பிய ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி முயற்சி எடுக்கவில்லை என்றால் நாங்கள் உயிருடன் திரும்பிஇருக்க முடியாது. அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, “18 மாதங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பி உள்ளோம். நாங்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

புர்னேந்து திவாரி என்பவர்மட்டும் தோஹாவில் இருப்பதாகவும் அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x