Published : 12 Feb 2024 06:28 AM
Last Updated : 12 Feb 2024 06:28 AM

ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதநிலையில், அக்கட்சியின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி என்றழைக்கப்படும் மறைந்த மூத்த தலைவர் ம.சிங்கரவேலரின் 78-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான தொகுதி பங்கீடு என்பது இருக்காது. மாநிலங்களுக்கு ஏற்ப அது மாறுபடும். கட்சிகளுக்கு இடையே பரஸ்பர போட்டிகள் இருக்கும். இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது அல்ல. யார் வெற்றி பெறக்கூடாது என்பதே ஆகும்.

தமிழகத்தில், திமுக சார்பில் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. சில கட்சிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை இன்னும் நடக்கவில்லை. எனினும் வரும் 12, 13-ம் தேதிகளுக்கு பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விரைந்து உடன்பாடுகள் ஏற்படும். கூட்டணி பங்கீடுகளில் பெரியளவில் பிரதிவாதங்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை.

ஏற்கெனவே கட்சிகளுக்கு இடையே கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எளிய முறையில் உடன்பாடுகள் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவுஇல்லாத நிலையில், அக்கட்சியின் பாஜகதேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகைஎந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x