Published : 08 Feb 2024 02:26 PM
Last Updated : 08 Feb 2024 02:26 PM

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பதற்றம் வேண்டாம் புரளி என காவல்துறை விளக்கம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிகளில் குவிந்தனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு அப்பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

காவல்துறை சோதனையை அடுத்து பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சம்பவம் தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பீதியடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர். நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகர், பாரிமுனை, ஜெ.ஜெ.நகர், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம் போன்று சென்னையின் பல இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வருகின்றன பள்ளி நிர்வாகங்கள்.

பீதி அடைய வேண்டாம்: இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பீதி அடைய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பெற்றோர்கள் பீதி அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x