Published : 01 Dec 2023 12:44 PM
Last Updated : 01 Dec 2023 12:44 PM

பெங்களூருவில் 10+ பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளி முன் குவிந்த பெற்றோர்கள்

பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள 10-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டலுக்கு ஆளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த மிரட்டல்கள் வெறும் புரளி என்று போலீஸார் கருதினாலும், உண்மை நிலையைக் கண்டறிய மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் அனுப்பப்பட்டு சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து பெங்களூருவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிகளுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அந்த மின்னஞ்சல்களில் கூறப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து எங்களுக்கு தகவல் வந்ததும் எங்களது குழுக்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்றன. பள்ளிகளில் இருந்த அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது" என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா கூறுகையில், "தற்சமயம் வரை 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. பள்ளிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி ஒன்றுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், "நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டுக்கு எதிரே இருந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பள்ளியை ஆய்வு செய்ய நான் இங்கு வந்தேன். இப்போது வரை இதுவெறும் மிரட்டலாகவே தெரிகிறது. என்றாலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

கடந்த ஆண்டும் இதேபோல் பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது வதந்தி என்பது தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x