Published : 08 Feb 2024 05:46 AM
Last Updated : 08 Feb 2024 05:46 AM
சென்னை: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180-வது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2-வது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணியை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவான்மியூர் கடற்கரைச் சாலையில் அங்குள்ள வியாபாரிகளிடம் கடையின் முகப்பில் குப்பைத் தொட்டி வைத்து, அதில் குப்பையைப் போடவும் அறிவுறுத்தினார்.
பெருங்குடி மண்டலம், 184-வது வார்டில் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொடுங்கையூர் குப்பை கொட்டும்வளாகத்தில் 62 லட்சம் டன் குப்பையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 லட்சம் டன் குப்பையும் சேர்ந்துள்ளது.
இதில் பெருங்குடியில் சுமார் 24 லட்சம் டன் குப்பைபயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, 50 ஏக்கருக்கு மேலான நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு நபரால் 700 கிராம் குப்பை உருவாகிறது. இது சென்னையில் நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 300 டன் குப்பையாக சேருகிறது. இவற்றை கையாள்வது மிகப்பெரிய சவாலாகும்.
இதைப் பொதுமக்கள் உணர்ந்து குப்பையை வகைப் பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT