Published : 07 Feb 2024 06:13 AM
Last Updated : 07 Feb 2024 06:13 AM
செங்குன்றம்: சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், 6 வழிச்சாலை பணி முழுமை பெறாமல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னையில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய முக்கிய சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இச்சாலை, சென்னை - மாதவரம், திருவள்ளூர் மாவட்டம் - செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது.
மாதவரம் முதல் ஆந்திர மாநிலம்- தடா வரையில் சுமார் 43 கி.மீ. தூரத்துக்கு புனரமைத்து இச்சாலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, இந்தசாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் செங்குன்றம் அருகே நல்லூர் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு மாதவரம் முதல் தடா வரை 6 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அச்சாலை பணி முழுமை பெறாமல் நல்லூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இச்சூழலில், 6 வழிச்சாலை பணி முழுமை பெறாமல் கட்டணம்வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச் சாவடி முற்றுகை போராட்டம் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், இ.மோகனா, சி.பெருமாள், ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சுங்கச் சாவடியை முற்றுகையிட்டனர். அதுமட்டுமல்லாமல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 130 பேரை சோழவரம் போலீஸார் கைது செய்து, காரனோடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT