Published : 05 Feb 2024 09:49 AM
Last Updated : 05 Feb 2024 09:49 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதையடுத்து, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய விவரங்கள், தமிழக பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து ஸ்பெயினில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக, ஸ்பெயின் சென்றுள்ளார். இதற்காக கடந்த ஜன.27-ம் தேதி சென்னையில் இருந்து ஸ்பெயின் சென்ற அவர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் வரும் பிப்.12-ம் தேதி தொடங்குகிறது. அன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இதையடுத்து, வரும் பிப்.19-ம் தேதி தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த இரு நிகழ்வுகளும் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரை தொடர்பாகவும், பட்ஜெட் தொடர்பாகவும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று ஸ்பெயினில் இருந்த படியே முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து காணொலி வாயிலாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் முதல்வரின் முதல்நிலை செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நிதித்துறை செயலர் உதயச்சந்திரனிடம் பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி குறித்தும், ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைமை, முக்கியமான அம்சங்கள் குறித்தும் விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநர் உரையானது இறுதி செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, வரும் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியால் சட்டப்பேரவையில் வாசிக்கப்படும்.
அமைச்சர் ஆலோசனை
இந்த சூழலில், பொது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் துறை செயலர் அபூர்வா, சர்க்கரைத் துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் ஆணையர் ஜி.பிரகாஷ், சிறப்பு செயலாளர் பொ.சங்கர், இணை ஆணையர் த.அன்பழகன், வேளாண் இயக்குநர் பி.முருகேஷ், தோட்டக்கலை துறை இயக்குநர் பி.ஞானவேல் பாண்டியன் பங்கேற்றனர்.
ஏற்கெனவே, விவசாய அமைப்புகள், வணிகர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT