Published : 02 Feb 2024 03:54 PM
Last Updated : 02 Feb 2024 03:54 PM

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கு: பிப்.6-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தீர்ப்புக்காக பிப்.6ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.இருவரும் வரும் பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்" என்று வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா. மோகன், எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டிஎஸ்பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில், ஆய்வாளர் தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும். வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே, போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர்" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் முக்கிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் கோரிய மனு மீது பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x