Published : 02 Feb 2024 02:57 PM
Last Updated : 02 Feb 2024 02:57 PM

“பாஜக அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்துகிறது” - விசிக மா.செ. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருமாவளவன்

சென்னை: சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு;

# 26.1. 2024 அன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இது போன்ற மாநாடு நடத்தப்பட்டது இல்லை என்ற சாதனையைப் படைத்துள்ளனர். இதற்குக் காரணமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும், நமது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து சனநாயக சக்திகளுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது

# 2024 ம்க்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்றும், கூட்டணியைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் நிறுவனர்- தலைவர் தொல்.திருமாவளவனிடம் அளிப்பது என்றும் கூட்டம் தீர்மானிக்கிறது.

# ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி முடக்கி வருகிறது. ஜார்கண்ட் மாநில முதலமைச்சர், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஹேமந்த் சோரன் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவரைக் கைது செய்து இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான சந்தேகங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டிருப்பது பொதுத் தேர்தலை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, ஒப்புகை சீட்டுடன் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களையும் இணைக்க வேண்டும் ஒப்புகைச் சீட்டுகளை முழுவதுமாக எண்ணி அதன் அடிப்படையில்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

# தமிழக அரசுப் பணிகளில் பணிபுரியும் எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான 200 பாயின்ட் ரோஸ்டர் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ் சி, எஸ் டி பிரிவினரை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எஸ்சி , எஸ்டி ஊழியர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது போல அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 ( 4 ) A இன் படி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும், அதுவரை பதவி இறக்கம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

# தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதிநிலை அறிக்கை எஸ்சி எஸ்டி துணைத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும், அதற்கு ஏற்ப சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

# இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில்களில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்'என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்து இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் மேற்கோள் காட்டி அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 24 ( 4 ) கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படுகிறவர்கள் செல்வதற்கு வழிவகை செய்கிறது. அப்படிச் செல்லும்போது யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்ற ஆணையைப் பெற்று சப் இன்ஸ்பெக்டர் தகுதிக்குக் குறையாத காவல்துறை அதிகாரியின் உதவியோடு செல்லலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த அதிகாரிகள் கோயில் கருவறைக்குள்ளே சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு சொல்கிறது. அத்துடன் இந்து அல்லாதவர்கள் யாரும் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி அதிகாரிகள் செல்வதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு 24 (4 ) இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கின்ற காரணத்தினால் இந்து அல்லாத காவல்துறை அதிகாரிகளும் கோயிலுக்குள் நுழைய முடியாது என்று ஆகிறது. இது காவல்துறையினரை மத ரீதியில் பாகுபடுத்துவதாக உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 24 (4) இல் உரிய திருத்தம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x