Published : 11 Jan 2024 05:40 AM
Last Updated : 11 Jan 2024 05:40 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பேருந்து நிலையத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு பங்கேற்று பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள், ரொக்கம் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி, மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மு.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 993 பேருக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆகிய இடங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6,25,729 அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சண்முகவள்ளி, துணைப்பதிவாளர் கருணாகரன், வட்டாட்சியர் விஜயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x