Published : 09 Jan 2024 04:12 AM
Last Updated : 09 Jan 2024 04:12 AM
வேலூர் / திருவண்ணாமலை / ராணிப்பேட்டை: வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெய்த பரவலான மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று மாலை வரை பரவலான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னையில் 7.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
குடியாத்தம் 3.40, மேல் ஆலத்தூர் 4.40, மோர்தானா அணை பகுதி 4, விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் பகுதியில் 4, காட்பாடி 3.60, அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 1.20, பேரணாம்பட்டு 4.80, வேலூர் 7.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர், போளூர் உள்ளிட்ட வட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டியது. இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். மழையின் தாக்கம் 2-வது நாளாக நேற்றும் நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 53 மி.மீ., மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 1, செங்கத்தில் 4.80, போளூரில் 10.20, ஜமுனாமரத்தூரில் (ஜவ்வாதுமலை) 6, கலசப்பாக்கத்தில் 12, தண்டராம்பட்டில் 24.40, ஆரணியில் 17, செய்யாறில 20, வந்தவாசியில் 40, வெம்பாக்கத்தில் 15, சேத்துப்பட்டில் 27.60 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 21 மி.மீ., மழை பெய்துள்ளது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப் பாக்கம், கலவை, திமிரி, ஆற்காடு, வாலாஜா உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து பரவலாக மிதமானது முதல் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பனப்பாக்கத்தில் 29.2 மி. மீ. மழை பதிவானது. இதேபோல் மற்ற பகுதிகளில் பெய்த மழை நிலவரம் விவரம் (மி.மீ) : காவேரிப்பாக்கம் 24, வாலாஜா 22, மின்னல் 17.4, கலவை 11.2, சோளிங்கர் 11, ராணிப்பேட்டை 5.2 மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT