Published : 02 Jan 2024 09:18 AM
Last Updated : 02 Jan 2024 09:18 AM
மதுரை/பழநி/திருச்சி: தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, நீண்டநேரம் காத்திருந்து மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் வழிபட்டனர். அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல, திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி அம்மன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, பழநி அடிவாரம், கிரிவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல, திருச்சி ஸ்ரீரங்கம்ரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு, சுவாமியை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT