Published : 31 Dec 2023 04:12 AM
Last Updated : 31 Dec 2023 04:12 AM

குன்னூர் நகராட்சியில் காலி பணியிடங்கள்: வளர்ச்சி பணி நடைபெறாததால் மக்கள் அவதி

குன்னூர்: குன்னூர் நகராட்சியில் ஆணையர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வர்த்தக நகரமான குன்னூரை சுற்றி, பல தேயிலை எஸ்டேட்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், சுற்றியுள்ள பல கிராம மக்களும் தொழில் நிமித்தமாக குன்னூருக்கு வருகின்றனர்.

இதனால், மக்கள் மற்றும் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், குன்னூர் நகராட்சியில் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாதாந்திர கூட்டம் நடத்தகூட முடிவதில்லை. இதனால், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை பேச முடியாமல் ஏமாற்றமடைவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக கவுன்சிலர்கள் கூறும் போது, “குன்னூர் நகராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வார்டு பிரச்சினைகளை மாதாந்திரம் நடக்கும் கூட்டங்களில் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், அண்மைக் காலமாக நகராட்சி கூட்டங்களில் அதிகாரிகள் யாரும் முறையாக பங்கேற்காததால், வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினாலும் பலன் இல்லை.

குறிப்பாக, நிரந்தர ஆணையர் இல்லாததால், உதகை நகராட்சி ஆணையர்தான் இங்கும் பொறுப்பு அதிகாரியாக உள்ளார். மேலும், நகர திட்டமைப்பு அலுவலர், கட்டிட ஆய்வாளர், வருவாய் அலுவலர், இளநிலை உதவியாளர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது மட்டுமின்றி, தற்போது சுகாதார பிரிவில் பணியிலுள்ள நகர் நல அலுவலர் உட்பட பலரும் விடுமுறையில் இருக்கின்றனர்.

இது போன்ற காரணங்களால் நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் கூட்டம் நடத்தப்பட வில்லை. எங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை. நகராட்சியில் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. மேலும், நகராட்சிக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட வில்லை. தற்போது பொறுப்பு பணியில் உள்ள ஆணையர், பொது நிதியிலிருந்து நிதியை எடுத்து செலவு செய்வதற்கு தயக்கம் காட்டுகிறார்.

நகராட்சியின் அடிப்படை பணியே மக்களுக்காக குடிநீர், நடைபாதை, கழிவு நீர் வசதியை நிறைவேற்றுவதே. ஆனால், வார்டுகளில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்ற முடியாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குன்னூர் நகராட்சியில் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவதுடன், இனி வரும் காலங்களில் மாதாந்திர கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x