Published : 30 Dec 2023 06:10 AM
Last Updated : 30 Dec 2023 06:10 AM
சென்னை: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. முன்னதாக காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 39,845 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 48 மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 8,500 போலீஸாரும் மீட்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 32 மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதற்காக 58 படகுகள் பயன்படுத்தப்பட்டன. மீட்பு பணியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழக காவல்துறையின் செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் செயல்பட்டார்.
கடந்த 17-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை வெள்ளத்தில் சிக்கிய 21,306 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும்3,248 கால்நடைகள், 265 வாகனங்கள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன. அதோடு மழையின்போது சாலைகளில் விழுந்த 483 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களுக்கு 2,29,894 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்திய சட்டம் - ஒழுங்கு கூடுதல்டிஜிபி அருண் மற்றும் களப்பணியாற்றிய அனைத்து போலீஸாருக்கும் பாராட்டுகள். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT