Published : 30 Dec 2023 06:10 AM
Last Updated : 30 Dec 2023 06:10 AM

சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் தகவல்

‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது' என்ற தலைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் கல்லூரியின் தலைவர் பதம்சந்த் சோடியா, இணைச் செயலர் ஹேமந்த் சோடியா, முதல்வர் வெங்கட்ராமன், டீன் எம்.எம்.ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: இந்த ஆண்டு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில்மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் பங்கேற்று மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் பல்வேறுகேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்த வண்ணம் உள்ளது. உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரச்சான்று அளிக்கப்பட்ட இந்த தளவாடங்களை நமது பாதுகாப்பு அமைச்சகமும் வாங்குகிறது.

நடப்பு நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் இதை 24 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். உள்நாடு, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து ராணுவ தளவாடப் பொருட்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயை சர்வதேச அளவில் பயன்படுத்தும் நிலையை உருவாக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முதல்கட்டமாக ரஷ்யா மற்றும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதவாறு தொடங்கப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் சாதாரண மக்கள் சிறுக சிறுக சேமித்து அந்த தொகை தற்போது 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் பதம்சந்த் சோடியா, இணைச் செயலாளர் ஹேமந்த்சோடியா, முதல்வர் வெங்கட்ராமன்,டீன் எம்.எம். ரம்யா, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x