Published : 29 Dec 2023 06:04 AM
Last Updated : 29 Dec 2023 06:04 AM

உரத் தொழிற்சாலையை மூடக் கோரி 2-வது நாளாக மீனவர் போராட்டம்

சென்னை: எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியார் உர தொழிற்சாலையை மூடவலியுறுத்தி 2-வது நாளாக மீனவர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினர். எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அமோனியா வாயு முக்கிய மூலப் பொருளாகும். சரக்கு கப்பல்களில் வரும் திரவ வடிவிலான அம்மோனியா வாயு, எண்ணூர் பகுதியில் கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழியாக தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாயில் கடந்த 26-ம் தேதி நள்ளிரவு 11.45 மணி அளவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றியுள்ள மீனவ பகுதிகளான பெரிய குப்பம், சின்னகுப்பம், தாழங்குப்பம், எண்ணூர், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்மோனியா வாயு பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் மயக்கம், சுவாசக் கோளாறு, தோல் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலோர பகுதிகளில் மீன்களும் இறந்து மிதக்கின்றன. இந்நிலையில், உரிய பாதுகாப்பு இன்றி இயங்கும் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மீனவ மக்கள் கடந்த புதன்கிழமை முதல்போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்களிடம், தொழிற்சாலையை மூடும் வரை போராடுவோம் என தெரிவித்து போராடி வருகின்றனர். நேற்றும் 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கூறும்போது, "ஒவ்வொரு நாளும் நாங்கள் இங்கு அச்சத்தோடு வாழ முடியாது. இங்குஅவ்வப்போது லேசான அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு வந்தது.

அதனால்குறைவான அளவில் பாதிப்பு இருந்தது. இப்போது நள்ளிரவில் இப்பகுதிமக்கள் அனைவரும் வாயு கசிவால்உயிர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினோம். இந்த தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. அதனால் இத்தொழிற்சாலை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே மூடும் வரை போராட்டம் தொடரும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x