Published : 29 Dec 2023 04:06 AM
Last Updated : 29 Dec 2023 04:06 AM

கனமழை எச்சரிக்கை: அணைகளில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறப்பு

பிரதிநிதித்துவப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அணைகளில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலையில் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையாலும், அதை தொடர்ந்து வந்த நாட்களில் பெய்த மழையாலும், 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நிரம்பியது. இதனால் அணைக்கு உள்வரத்தாக வரும் தண்ணீர் உபரியாக கடந்த 3 நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலையில் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.10 அடியாக இருந்தது. அணைக்கு 739 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காலை 8 மணிக்கு 804 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 31 மற்றும் 1-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்திலுள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் நேற்று காலை அறிவித்தார். அவரது அறிவிப்பு: கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து மொத்த நீர் திறப்பு தற்போது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் படுகிறது.

இது படிப்படியாக 5 ஆயிரம் கனஅடியாக மாலைக்குள் அதிகரிக்கப்படும். மேலும் மழை மற்றும் நீர்வரத்தை பொறுத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மதியம் 12 மணிக்கு அணைகளில் இருந்து 5,678 கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டிருந்தது. மாலையில் 5,190 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்திருந்த தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் மீண்டும் பொங்கி பாய்ந்தோடியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், அணைப் பகுதிகள் மற்றும் பிற இடங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): மாஞ்சோலை- 28, காக்காச்சி- 30, நாலுமுக்கு- 40, ஊத்து- 52, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, களக்காடு- தலா 1, பாபநாசம்- 6, சேர்வலாறு அணை- 4, கன்னடியன் அணைக்கட்டு- 5.80. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x