Published : 29 Dec 2023 05:12 AM
Last Updated : 29 Dec 2023 05:12 AM

ரசிகர் மன்றம் மூலம் தேமுதிகவை தொடங்கி அரசியலில் நுழைந்த விஜயகாந்த்

மதுரையில் நடைபெற்ற தேமுதிக தொடக்க விழாவில் பங்கேற்க வந்த தொண்டர்கள். (உள்படம்) விழாவில் பேசிய விஜயகாந்த்.  கோப்பு படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: திரையுலகில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தியதைப்போலவே, அரசியல் அரங்கிலும் விஜயகாந்த் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ரசிகர் மன்றம் மூலம் பொதுநல சேவைகளை செய்துவந்த விஜயகாந்துக்கும், பாமகவுக்கும் ஏற்பட்ட மோதல், அவரது ரசிகர் மன்றம், அரசியல் கட்சியாக மாற அடித்தளமிட்டது. இதையடுத்து, 2005 செப்டம்பர் 14-ல் மதுரை திருநகர் அருகே 150 ஏக்கரில் மாபெரும் மாநாட்டை நடத்தி, தேமுதிகவை தொடங்கினார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டுக்கு, எம்ஜிஆர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் விஜயகாந்த் வந்தார். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த பலரும் ஆர்வமாக தேமுதிகவில் இணைந்தனர். தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் இருந்ததால், ‘பூத்’ கமிட்டி அமைப்பது, கட்சிக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படவில்லை.

நண்பர்களுக்கு வாய்ப்பு: கட்சி தொடங்கிய பின்னர், முதல் பொருளாளராக தனது சிறுவயது நண்பர் சுந்தர்ராஜனை நியமித்தார் விஜயகாந்த். மேலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்து, எம்எல்ஏவாக்கினார்.

அதேபோல, ஏகேடி.ராஜா (உசிலம்பட்டி), அருண்பாண்டியன் (பேராவூரணி), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்), சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு) போன்ற தனது நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள், சினிமாவில் நடித்தவர்களுக்கு கட்சிகளில் பொறுப்பு வழங்கியதுடன், சட்டப்பேரவை உறுப்பினராக்கினார்.

கட்சி தொடங்கிய ஓராண்டிலே 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து 232 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். தனது சொந்த ஊரான மதுரையில் விஜயகாந்த் போட்டியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில், விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார்.

ஆனாலும், அந்த தேர்தலில் தேமுதிக 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று, அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் 10 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், 2011 தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே விரும்பினர்.

யாருக்கும் பிடிகொடுக்காமல் இருந்த விஜயகாந்த், கடைசி நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2011 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க தேமுதிக உதவியது. அந்த தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்று, விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார். திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பின்னர் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் விஜயகாந்த்துக்கு சரிவை ஏற்படுத்தத் தொடங்கின. அவரது நண்பரும், எம்எல்ஏவுமான சுந்தர்ராஜன் உட்பட ஏராளமான எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து, விஜயகாந்துக்கு எதிராகத் திரும்பினர்.

அதுவே விஜயகாந்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, உடல்நலக் குறைபாட்டுக்கு முக்கியக்காரணமாக அமைந்ததாக அவரது மனைவியும், தேமுதிகவின் தற்போதைய பொதுச் செயலாளருமான பிரேமலதா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x