Published : 29 Dec 2023 07:06 AM
Last Updated : 29 Dec 2023 07:06 AM

“ஏழை, எளியோருக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த்” - தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: ஏழை, எளியோருக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த் என்று தமிழக அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஏழை எளியோருக்கு உதவும் கருணை உள்ளம் கொண்ட விஜயகாந்த், திரைப்படங்கள் மூலம் நாட்டுப்பற்று, கருத்தாழமிக்க செய்திகளை மக்களுக்கு தெரிவித்தவர். அவரை இழந்து வாடும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்கள், தேமுதிகவினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சாதி, மத பேதமின்றி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் விஜயகாந்த். அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

திக தலைவர் கி.வீரமணி: வெள்ளையுள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர் விஜயகாந்த். அவருக்கு ‘பெரியார் விருது’ அளித்து மகிழ்ந்தவர்கள் திராவிடர் கழகத்தவர். கட்சியின் பெயரில்கூட “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்“ என்ற திராவிட உணர்வைப் பதித்தவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகத்துக்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர். தமிழ்மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு என்றும் ஆதரவு வழங்கினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: விஜயகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தனது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர் விஜயகாந்த்.

விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக அரசியலில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர் விஜயகாந்த். உடல்நலம் சீராக இருந்திருந்தால் தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாக நீடித்திருப்பார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு இறுதி மூச்சு வரை பணியாற்றியவர்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: சினிமா, அரசியல் என 2 தளங்களிலுமே தடம்பதித்த விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய இழப்பு.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக, வெளிப்படையாக சொல்லும் போக்கு, எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகுக்கு அடையாளப்படுத்தியுள்ளது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்: அரசியலில் நேர்மையும், ஆன்மிகப் பணிவும், சமுதாயத்தின் மீது இரக்க சிந்தனையும், மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்டவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: தமிழக அரசியல் களத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: சினிமா, அரசியல், சமூக சேவை, உள்ளிட்ட பன்முகத் திறமைகளை உடைய விஜயகாந்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி: மக்களின் மனங்களை வென்ற விஜயகாந்தின் ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மமக தலைவர் ஜவாஹிருல்லா, பாமக தலைவர் அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், தவாக தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா, காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவிமணியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x