Published : 27 Dec 2023 06:07 AM
Last Updated : 27 Dec 2023 06:07 AM

ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்படுவாரா? மாட்டாரா?

சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிகிறது. அடுத்த மாதம் உலக முதலீட்டாளர் மாநாடும் அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் அவை முடிந்த பிறகு பேரவைக் கூட்டம நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், முந்தைய கூட்டம் முடித்து வைக்கப்படாத நிலையில், இக்கூட்டத்தில் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் மரபுகள் அடிப்படையில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். தற்போதுள்ள சூழலில், மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகை வருகிறது. பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி கடைசி வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்தாண்டு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். தொடர்ந்து, ஆளுநரின் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அந்த சூழலில், அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்காத நிலையில், அரசு அளித்த உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்தவை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு விஷயங்களில் ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களை ஆளுநர் திருப்பியனுப்பினார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு கால நிர்ணயம் வேண்டும் என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆளுநரும், முதல்வரும் பேசி மசோதாக்கள் குறித்து தீர்வு எட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆளுநர், முதல்வரை சந்திக்குமாறு கூறிய நிலையில் புயல், வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளால் சந்திப்பு தள்ளிப்போகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநரை முதல்வர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநர் அழைக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வழக்கமாக அலுவல்கள் முடிந்ததும் முடித்து வைக்கப்படும். ஆனால், இதுவரை இந்தாண்டுக்கான கடைசி கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படவில்லை. இதன் அடிப்படையில், அந்த கூட்டத்தொடரின் அடுத்த கூட்டத்துக்கான தேதியை பேரவைத் தலைவரே முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ஆண்டு முதல் கூட்டத்தை ஆளுநரை அழைத்து நடத்தலாமா அல்லது அவரை அழைக்காமலேயே கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்த ஆலோசனையும் நடைபெறுகிறது. இவற்றின் அடிப்படையில், சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x