Published : 22 Dec 2023 06:49 PM
Last Updated : 22 Dec 2023 06:49 PM

தமிழக அரசு Vs மத்திய அரசு முதல் மீண்டும் வெடித்த ‘மல்யுத்த’ விவகாரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.22, 2023

“தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது”: தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை.

உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் ‘மாநிலப் பேரிடர்’ என அறிவிக்க முடியும் " என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் சென்னையில் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு வழங்கியுள்ளதாக அவர் விவரித்தார்.

மேலும், சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த மையம் தென் மாவட்டங்களில் அதி கனமழை தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதியே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் தகவல்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் "மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" என தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் மீது தங்கம் தென்னரசு காட்டம்: “மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதல்வரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் ' தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை' என்று சொல்வதன் மூலமாக தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

மேலும், 'ஒரே நாடு - ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழகத்தில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை: ஐகோர்ட்: சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த அந்த உத்தரவில், “சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டியது தேவையற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் அதனை தற்போது மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மின்கட்டண உயர்வால் தொழில்துறை பாதிப்பு” - இபிஎஸ்: கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“பிரதமரே... நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்” - பஜ்ரங் புனியா: பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் இந்த முடிவை எடுத்துள்ள அவர், “என்னை இனி மல்யுத்தக் களத்தில் பார்க்க மாட்டீர்கள்” என்றும் கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்வாகி உள்ளது போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு பின்னர் விலகல் குறித்து அறிவித்துள்ள முன்னணி வீராங்கனை சாக்‌ஷிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார், ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான விஜேந்தர் சிங்.

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வாகி உள்ள நிலையில், சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

முன்னதாக, “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பெண் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார்.

பூஞ்ச் தாக்குதல் மீது எதிர்க்கட்சிகள் கேள்வி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசை கண்டித்துள்ள எதிர்க்கட்சியினர், “மீண்டும் புல்வாமா தாக்குதல் சம்பவமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

“எம்.பிக்கள் பலரும் தங்களை சஸ்பெண்ட் செய்ய கோரினர்”: மக்களவை எம்.பிக்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மேலும் பலர், தங்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

“மக்களவை அத்துமீறலின்போது ஓடிய பாஜக எம்.பி.க்கள்”: “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். நாங்கள் இதைக் கண்டோம். ஆனால், ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை” என்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, “இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. அதனை எதிர்த்து நாங்கள் கூடியுள்ளோம். நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசினார்.

“முக்கிய விவாதத்தில் சாதியை நுழைத்தது ஏமாற்றம்”: "ஒரு முக்கியமான விஷயம் பற்றி விவாதிக்கும்போது, சாதியை ஒரு தீவிர விவாதத்துக்கு கொண்டுவந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. தனி நபரின் பிறப்பிடம், அவரை விமர்சிக்க ஒரு வாதமாகப் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது" என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு: மத்திய அரசு: நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பான வழக்கில், பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x