Published : 22 Dec 2023 11:36 AM
Last Updated : 22 Dec 2023 11:36 AM

“துன்புறுத்தல்கள் தொடரும்” - மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவுகள் குறித்து வினேஷ் போகத் வருத்தம் 

வினேஷ் போகத்

புதுடெல்லி: “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பெண் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை 12 வருடங்களாக வழிநடத்தி கூட்டமைப்பின் தலைவராக இருந்தவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டி மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தாண்டு ஜனவரி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரர் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை சுதந்திரமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் நடந்த இந்தப் போராட்டத்தினை இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் மற்றும் பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் ஜூன் மாதம் நடந்திருக்க வேண்டிய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை (டிச.21) காலையில் நடந்தது. இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவியுடன் 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரிஜ் பூஷணின் அணியினரின் இந்த வெற்றி போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதிய தலைவர் தேர்தல் முடிவு குறித்து போராட்டதை முன்னெடுத்த வீராங்கனையான வினேஷ் போகத் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். வியாழக்கிழமை தனது சக விளையாட்டு வீரர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், “மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் இருப்பது வேதனையாக இருக்கிறது. எங்களின் வேதனையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மற்றொரு முன்னணி வீராங்கனையான சாக்சி மாலிக் கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x