Published : 22 Dec 2023 04:34 PM
Last Updated : 22 Dec 2023 04:34 PM

“நாங்கள் ஒன்றுபட்டால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது” - ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கார்கே ஆவேசம்

புதுடெல்லி: “இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. அதனை எதிர்த்து நாங்கள் கூடியுள்ளோம். நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

நாடாளுமன்றத்திலிருந்து 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதால் இண்டியா கூட்டணியினர் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணையும்போது நரேந்திர மோடியால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் எங்களை அதிகம் நசுக்க நினைக்கும்போதுதான் நாங்கள் அதிகமாக மேலெழும்புவோம். நாங்கள் இந்த தேசத்தை, ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு போராடுகிறோம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரின் கருத்துக்கும் பதிலளித்தார். அப்போது அவர், ”நீங்கள் அரசியலமைப்புப் பதவியில் இருக்கிறீர்கள். அதற்கேற்றார் போல் நடக்க வேண்டுமே தவிர சாதி குறித்து புலம்பக் கூடாது. நாடாளுமன்றத்தில் நான் நிறைய முறை பேசவிடாமல் தடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக நான் தலித் என்பதால் தடுக்கப்பட்டேன் என்று கூற முடியுமா? பேச்சுரிமையை எங்களுக்குக் கொடுத்தது காந்தியும், நேருவும். எங்களின் பேச்சுரிமையை யாரும் பறிக்க முடியாது. நீங்கள் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை இயற்றலாம். எங்களைக் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், நாங்கள் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்போம்” என்றார்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவையில் ஜக்தீப் தன்கர் செயல்படும் விதத்தை நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது நடித்துக் காட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். அது பற்றி பேசிய தன்கர், “நான் விவசாயிகளைக் கொண்ட ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறாக எள்ளிநகையாடப்பட்டேன்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே கார்கே தற்போது பேசியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். நாங்கள் இதைக் கண்டோம். ஆனால், ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை” என்றார். முழு விவரம் > “மக்களவை அத்துமீறலின்போது ஓடிய ‘தேசபக்த’ பாஜக எம்.பி.க்கள்” - ராகுல் காந்தி தாக்கு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x