Published : 22 Dec 2023 04:39 PM
Last Updated : 22 Dec 2023 04:39 PM

“மீண்டும் புல்வாமா சம்பவமா?” - 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பூஞ்ச் தாக்குதல் மீது எதிர்க்கட்சிகள் கேள்வி

தீவிரவாதிகள் தாக்குதலில் சேதமடைந்த ராணுவ வாகனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசை கண்டித்துள்ள எதிர்க்கட்சியினர், “மீண்டும் புல்வாமா தாக்குதல் சம்பவமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி எம்பியான சஞ்சய் ரவுத் கூறுகையில், "நேற்று பூஞ்சில் நடந்த தீவிரவாத தாக்குதல், அப்படியே புல்வாமா தாக்குதல் போலவே உள்ளது. அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. நமது வீரர்களின் தியாகங்களை நீங்கள் (பாஜக) மீண்டும் அரசியலாக்க விரும்புகிறீர்களா? 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தைக் கூறி வாக்கு கேட்க விரும்புகிறீர்களா? பூஞ்ச் சம்பவம் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டைவிட்டே வெளியேற்றுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், “அரசியல் சட்டப்பிரிவு 370 தான் காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்களுக்கு காரணம் என அவர்கள் (பாஜக) கூறினார்கள். இன்றும் அங்கு தீவிரவாதம் இருக்கிறது. கலோனல் மற்றும் கேப்டன் போன்ற ராணுவ அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர். தினமும் எங்காவது ஓர் இடத்தில் குண்டு வெடிக்கின்றது; அப்படியானால் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா? தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், பாஜகவினர் தீவிரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக பொய்யுரைப்பர்" என்று சாடினார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெகபூப் முப்தி ஆகியோரும் பூஞ்ச் தாக்குதல் குறித்து கண்டித்துள்ளனர்.

முன்னதாக, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்துத் தேடும் பணியில் உதவுவதற்காக இரண்டு வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். அந்த வாகனங்கள் தட்யார் மோர்க் என்ற இடத்தில் சென்றபோது மாலை 3.45 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக நம்பப்படும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என்ற இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் சிதைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தாக்குதலை சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வான் வழியாகவும், மோப்ப நாய்களின் உதவியுடனும் தீவிரவாதிகளை தேடுதல் பணிகள் நடந்தன. கடந்த மாதம் ரஜோரியில் இரண்டு கேப்டன்கள் உட்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x