Published : 21 Dec 2023 05:00 AM
Last Updated : 21 Dec 2023 05:00 AM

நிதி, நிர்வாக முறைகேடு புகார்... தேவியாக்குறிச்சி, பைத்தூர் ஊராட்சி தலைவர்கள் நீக்கம்: சேலம் ஆட்சியர் நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில், நிதி, நிர்வாகமுறைகேடு தொடர்பான புகாரில், தேவியாக்குறிச்சி, பைத்தூர் ஊராட்சித் தலைவர்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

தேவியாக்குறிச்சி ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்தவர் அமுதா. இவர் தவறான ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி வேலை உத்தரவு வழங்காமல் 3பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ள அனுமதியளித்தார். அமுதாவின் கணவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் அதேஊராட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டதற்கான பட்டியல் தொகை வழங்க லஞ்சம் பெற்றதாக, லஞ்சஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

அமுதா, தொடர்ந்து ஊராட்சித் தலைவராகச் செயல்பட்டால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதால், தமிழ்நாடுஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன்படி, அமுதாவைப் பதவியில் இருந்து நீக்கம் செய்து, ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, பைத்தூர் ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்தவர் கலைச்செல்வி. இவர், தனது மாமனார் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரதுபெயரில், அரசு விதிமுறைகளுக்கு முரணாக தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட நிதியில் இருந்து ரூ.3 லட்சத்துக்கு கல்கரை, மண் கரை அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெற்றதாக புகார் உள்ளது.மேலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அட்டைகளை, உரியவர்களிடம் அளிக்காமல் தன்வசம் வைத்திருந்திருந்தார்.

எனவே, அவர் ஊராட்சித் தலைவராகச் செயல்பட்டால், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி கலைச்செல்வியை பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x