Last Updated : 20 Dec, 2023 01:37 PM

 

Published : 20 Dec 2023 01:37 PM
Last Updated : 20 Dec 2023 01:37 PM

திருச்செந்தூர் கோயிலில் சிக்கியுள்ளவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூர்: தொடர் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் சிக்கி உள்ள பக்தர்களை மீட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.

அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (டிச.20) செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.

திருச்செந்தூர் கோயிலில் பெருமளவில் சிக்கிக் கொண்டு 3 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த பக்தர்களை, தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லும் வகையில் தமிழக அரசின் இலவசப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனமழையின் போது திருநெல்வேலி - திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சாலையின் துண்டிப்பின் காரணமாக பாதி வழியில் அவதிப்பட்டனர். அவர்களை மீண்டும் திருச்செந்தூருக்கு கொண்டு சேர்க்கும் பணியும் போக்குவரத்துத் துறை சார்பில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவித்த பயணிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 95 சதவீதம் போக்குவரத்து சேவை தற்பொழுது இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாத காரணத்தினால் போக்குவரத்து சேவை சில பகுதிகளில் வழங்க முடியாத நிலை உள்ளது.

மேலும், அங்கு வெள்ள நீர் வடிந்த உடன் பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகள் நீரில் மூழ்கி உள்ளது. பல பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வு பணி முடிந்தவுடன் சேதத்தின் மதிப்பு தெரிய வரும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x