Published : 20 Dec 2023 01:11 PM
Last Updated : 20 Dec 2023 01:11 PM

வெள்ளத்தால் பல வீடுகள் பாதிப்பு: உடமைகளை இழந்து தவிக்கும் தாமிரபரணி கரையோர மக்கள்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளும், அவற்றிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், கைலாசபுரம், துவரை ஆபீஸ் பகுதி, சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை, உடையார்பட்டி பகுதிகளில் வீடுகளை மூழ்கடித்து வெள்ளம் பாயந்ததால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் நேற்று வெள்ளம் வடியத் தொடங்கியது.

இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பலர் தங்கள் வீடுகளுக்கு சென்று ஓரடிக்கு தேங்கியிருந்த சகதியை அள்ளி வெளியே கொட்டி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். வீடுகளுக்குள் டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பலவும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்ததை பார்த்து கண்ணீர் விட்டனர். இதுபோல் வீடுகளுக்குமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் முழுக்க சேறு படிந்து சேதமடைந்திருந்தன.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையோரத்திலுள்ள துவரை ஆபீஸ் பகுதியில் பேச்சி முத்து உள்ளிட்ட 3 பேரின் வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன. இது போல் இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் சேதமடைந்திருந்தன. பல வீடுகளில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, எல்ஐசி பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும், பாடப் புத்தகங்கள், பைகள் உள்ளிட்டவையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

1992-ல் வந்த வெள்ளத்தை விட பல மடங்கு அதிகமாக வெள்ளம் வந்ததாகவும், வீடுகளை மூழ்கடித்த வெள்ளத்தால் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். சேதமடைந்த ஆவணங்களுக்கு மாற்றாக ஆவணங்களை வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிய ருக்கு பைகள், புத்தகங்கள், நோட்டு களையும் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தங்கி போர்வைகளை தெருத்தெருவாக விற்பனை செய்துவந்த ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்களும் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இங்குள்ள கட்டிடத்தில் இவர்கள் அடுக்கி வைத்திருந்த போர்வைகள் அனைத்தும் நனைந்தும், சேறு படிந்தும் நாசமாகி விட்டதாக கண்ணீருடன் தெரிவித்தனர். தங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x